தனியுரிமையும் விதிமுறைகளும்
தனியுரிமையும் விதிமுறைகளும்

அறிமுகம்

உலகம் முழுவதிலும் இருந்து கிடைக்கும் தகவல்களை ஒருங்கிணைத்து அவற்றை உலகளாவிய ரீதியில் அணுகக்கூடியதாகவும் பயனுள்ளதாகவும் மாற்றுவதே Googleளின் குறிக்கோள். அந்தக் குறிக்கோளைச் செயல்படுத்துவதில் இருப்பிடத் தகவல் முக்கியப் பங்காற்றுகிறது. வாகன வழிகளைக் காட்டுவது, உங்கள் தேடல் முடிவுகளில் உங்களுக்கு அருகிலுள்ளவை பற்றிய தகவல் கிடைப்பதை உறுதிசெய்வது, பொதுவாக எப்போது உணவகம் பிஸியாக இருக்கும் என்பதைக் காட்டுவது போன்றவற்றின் மூலம் Google முழுவதிலும் உங்கள் அனுபவங்களை இன்னும் தொடர்புடையதாகவும் பயனுள்ளதாகவும் மாற்ற இருப்பிடத் தகவல் உதவுகிறது.

சரியான மொழியில் இணையதளத்தை வழங்குவது, Googleளின் சேவைகளைப் பாதுகாப்பாக வைத்திருக்க உதவுவது போன்ற தயாரிப்பு தொடர்பான சில முக்கியச் செயல்பாடுகளுக்கும் இருப்பிடத் தகவல் உதவுகிறது.

Googleளின் தயாரிப்புகளையும் சேவைகளையும் நீங்கள் பயன்படுத்தும்போது, இருப்பிடத் தகவல் உள்ளிட்ட உங்கள் தரவை Google எப்படிப் பயன்படுத்துகிறது என்பதை Google தனியுரிமைக் கொள்கை விளக்குகிறது. Google பயன்படுத்தும் இருப்பிடத் தகவல் மற்றும் அது பயன்படுத்தப்படும் விதங்களை நீங்கள் எப்படிக் கட்டுப்படுத்தலாம் என்பது குறித்த கூடுதல் விவரங்களை இந்தப் பக்கம் வழங்குகிறது. 18 வயதிற்குக் கீழே உள்ள பயனர்களுக்கான சில தரவு நடைமுறைகள் வேறுபடக்கூடும். சிறுவர்களுக்காக Family Link மூலம் நிர்வகிக்கப்படும் Google கணக்குகள், சுயவிவரங்கள் ஆகியவற்றுக்கான Googleளின் தனியுரிமை அறிக்கையிலும் Googleளின் டீன் ஏஜர்களுக்கான தனியுரிமை வழிகாட்டியிலும் மேலும் அறிக.

இருப்பிடத் தகவலை Google எப்படிப் பயன்படுத்துகிறது?

பயன்படுத்தப்படும் சேவை/அம்சம், பயனர்களின் சாதனம் & கணக்கு அமைப்புகள் ஆகியவற்றைப் பொறுத்து இருப்பிடத் தகவலை Google பயன்படுத்தும் விதம் மாறுபடும். முக்கியமாகப் பின்வரும் வழிகளில் இருப்பிடத் தகவலை Google பயன்படுத்தலாம்.

பயனர் அனுபவங்களைப் பயனுள்ளதாக்க

Google தயாரிப்புகளைப் பயன்படுத்தும்போது, பயனுள்ள சேவைகளை வழங்குவதற்காகப் பயனர்களின் இருப்பிடத் தகவலை Google பயன்படுத்தலாம் அல்லது சேமிக்கலாம். இதில் ஒருவர் இருக்கும் இடத்திற்குத் தொடர்புடைய விரைவான தேடல் முடிவுகள், பயனர்களின் தினசரிப் பயணங்களுக்கான டிராஃபிக் முன்னறிவிப்புகள், ஒரு நபரின் நிகழ்நேரச் சூழலுக்கு (எ.கா. ஒருவரின் நிகழ்நேர இருப்பிடம்) தகுந்த பரிந்துரைகள் ஆகியவற்றை வழங்குதல் உள்ளிட்டவை அடங்கும். உதாரணமாக, திரைப்படங்களுக்கான காட்சி நேரங்களைத் தேடுபவர் அவர் இருக்கும் இடத்திற்கு அருகிலுள்ள திரையரங்குகளில் மட்டுமே திரைப்படங்களைப் பார்க்க விரும்பக்கூடும்; வேறொரு நகரத்தில் அல்ல. Google Mapsஸில், பயனர்கள் அவர்களின் இருப்பிடத்தை வரைபடத்தில் கண்டறியவும் அவர்கள் விரும்பும் இடங்களுக்குச் செல்வதற்கான வழிகாட்டலைப் பெறவும் இருப்பிடத் தகவல் உதவுகிறது.

பயனர்கள் தாங்கள் சென்று வந்த இடங்களை நினைவில் வைத்துக்கொள்ள உதவ

பயனர்கள் அவர்களின் சாதனத்துடன் எங்கெல்லாம் செல்கிறார்களோ அந்த இடங்களை அவர்கள் காலப்பதிவைப் பயன்படுத்திப் பார்ப்பதற்கும் சேமிப்பதற்கும் தேர்வுசெய்யலாம். Google கணக்கு அமைப்புகளில் ஒன்றான ‘காலப்பதிவு’ நீங்கள் சென்று வந்த இடங்களும், செல்வதற்குத் தேர்ந்தெடுத்த வழிகளும் அடங்கிய ஒரு வரைபடத்தை உங்களின் எல்லாச் சாதனங்களிலும் உருவாக்கும். ‘காலப்பதிவு’ அமைப்பைப் பயன்படுத்தத் தேர்வுசெய்தால் Google ஆப்ஸை நீங்கள் திறக்காத சமயங்களில் கூட, உங்கள் சாதனத்தின் துல்லியமான இருப்பிடங்கள் பிரத்தியேக வரைபடத்திலும் உங்கள் சாதனங்களிலும் தொடர்ந்து சேமிக்கப்படும். இந்தத் தகவலை எப்போது வேண்டுமானாலும் காலப்பதிவில் பார்க்கலாம், வேண்டாமெனில் நீக்கிக்கொள்ளலாம்.

விஷயங்களை விரைவாகக் கண்டறியவும் மிகவும் பயனுள்ள தேடல் முடிவுகளைப் பெறவும் பயனர்களுக்கு உதவ

உதாரணமாக, Google கணக்கு அமைப்பான இணையம் மற்றும் ஆப்ஸ் செயல்பாட்டைச் சொல்லலாம். இந்த அமைப்பு, பயனர்கள் அவர்களின் செயல்பாட்டுத் தரவையும் இருப்பிடம் போன்ற தொடர்புடைய தகவல்களையும் சேமித்து வைத்துக்கொள்ள அனுமதிக்கிறது. இதன் மூலம், Google சேவைகளில் உள்நுழைந்திருக்கும்போது பயனர்கள் அவர்களின் அனுபவத்தை மிகவும் பிரத்தியேகமாக்கலாம். உதாரணமாக, நீங்கள் கடந்த காலத்தில் எங்கிருந்து தேடினீர்களோ அந்தப் பொதுவான இடத்திற்குத் தொடர்புடைய முடிவுகளை Search காட்டலாம்.

மிகவும் தொடர்புடைய விளம்பரங்களைக் காட்ட

உங்கள் இருப்பிடத் தகவல் மிகவும் தொடர்புடைய விளம்பரங்களை உங்களுக்குக் காட்ட Googleளுக்கு உதவும். “எனக்கு அருகில் உள்ள ஷூ கடைகள்” போன்ற ஏதேனும் ஒன்றை நீங்கள் தேடும்போது உங்களுக்கு அருகில் உள்ள ஷூ கடைகளின் விளம்பரங்களை உங்களுக்குக் காட்டுவதற்காக இருப்பிடத் தகவல் பயன்படுத்தப்படலாம். இல்லையென்றால், செல்லப்பிராணிகளுக்கான காப்பீடு குறித்து நீங்கள் தேடுவதாக வைத்துக்கொள்வோம். அப்போது, வெவ்வேறு பகுதிகளில் காப்பீடு தொடர்பாக வழங்கப்படும் வெவ்வேறு பலன்களை விளம்பரதாரர்கள் உங்களுக்குக் காட்டக்கூடும். விளம்பரங்களைக் காட்ட இருப்பிடத் தகவல் எப்படிப் பயன்படுத்தப்படுகிறது என்பது குறித்து மேலும் அறிக.

மிகவும் பாதுகாப்பான அனுபவத்தை வழங்க

வழக்கத்திற்கு மாறான செயல்பாட்டையோ புதிய நகரத்தில் இருந்து கணக்கில் உள்நுழைவதையோ கண்டறிவதன் மூலம் உங்கள் கணக்கைப் பாதுகாப்பாக வைத்திருத்தல் போன்ற சில அடிப்படைச் சேவைகளை உங்களுக்கு வழங்குவதற்காக உங்கள் இருப்பிடம் குறித்த தகவலை Google பயன்படுத்துகிறது.

சமூகத்தில் பிரபலமடைபவை பற்றிய அடையாளம் நீக்கப்பட்ட தகவலையும், அடையாளம் நீக்கப்பட்ட கணிப்புகளையும் வழங்க மற்றும் ஆராய்ச்சி நோக்கத்திற்காக

ஆராய்ச்சிக்காகவும் சமூகப் போக்குகளைக் காட்டவும், ஒருங்கிணைக்கப்பட்ட அடையாளம் நீக்கப்பட்ட இருப்பிடத் தகவலையும் Google பயன்படுத்துகிறது.

வேறு எந்தெந்த வழிகளில் இருப்பிடத் தகவல் பயன்படுத்தப்படும் என்பதை அறிய, Google தனியுரிமைக் கொள்கையைப் பார்க்கவும்.

எனது Android சாதனத்திலும் ஆப்ஸிலும் இருப்பிடச் சேவை எப்படிச் செயல்படுகிறது?

உங்கள் சாதனத்தின் இருப்பிடத்தைப் பயன்படுத்தி உள்ளூர் தேடல் முடிவுகளையும் பயணம் குறித்த கணிப்புகளையும் பெறலாம். அத்துடன் உங்களுக்கு அருகிலுள்ள உணவகங்களைக் கண்டறியலாம். உங்கள் சாதனத்தில் உள்ள இருப்பிடச் சேவைகள் மூலம் இருப்பிடத்தைக் கணிக்க வேண்டுமா என்பதையும் உங்கள் சாதனத்தில் உள்ள சில சேவைகளும் ஆப்ஸும் சாதனத்தின் அந்த இருப்பிடத் தகவலைப் பயன்படுத்தலாமா என்பதையும், மேலும் அந்தத் தகவல் எந்தெந்த விதங்களில் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதையும் கட்டுப்படுத்த, மொபைல்கள் அல்லது டேப்லெட்களுக்கான Android சாதன அமைப்புகள் அனுமதிக்கின்றன.

சாதனத்தின் இருப்பிடத்தை ஆப்ஸ் பயன்படுத்தும் விதத்தை எப்படிக் கட்டுப்படுத்தலாம்?

சாதனத்தின் இருப்பிடத்தைப் பயன்படுத்த எந்தெந்த ஆப்ஸுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்பதை Android சாதன அமைப்புகளுக்குச் சென்று கட்டுப்படுத்தலாம். அமைப்புகளில், ஆப்ஸ் துல்லியமான இருப்பிடத்தை அணுக வேண்டுமா தோராயமான இருப்பிடத்தை அணுக வேண்டுமா என்பதைத் தேர்வுசெய்வதற்கான கட்டுப்பாட்டு விருப்பங்கள் உள்ளன. சாதனத்தின் இருப்பிடத்தை ஆப்ஸ் எப்போதும் அணுக வேண்டுமா, ஆப்ஸ் உபயோகத்தில் இருக்கும்போது மட்டும் அணுக வேண்டுமா, அணுகும் ஒவ்வொரு முறையும் ஆப்ஸ் அனுமதி கோர வேண்டுமா அல்லது எப்போதுமே அணுக வேண்டாமா என்பதையெல்லாம் தீர்மானிக்க உங்களை அனுமதிக்கும் கட்டுப்பாட்டு விருப்பங்களைச் சேர்த்துள்ளோம். எந்த Android பதிப்பில் உங்கள் சாதனம் இயங்குகிறது என்பதைப் பொறுத்து இந்த அமைப்புகளும் கட்டுப்பாட்டு விருப்பங்களும் கிடைக்கும். மேலும் அறிக.

சாதனத்தின் இருப்பிடம் கண்டறியப்படுவது எப்படி?

உங்கள் சாதன அமைப்புகளைப் பொறுத்து GPS, சென்சார்கள் (ஆக்சலரோமீட்டர், திசை காட்டி, காந்த அளவி, காற்றழுத்தமானி போன்றவை), மொபைல் நெட்வொர்க் சிக்னல்கள், வைஃபை சிக்னல்கள் போன்ற பலவற்றின் மூலம் கிடைக்கும் தகவல்களைப் பயன்படுத்தி Android சாதனங்கள் இருப்பிடத்தைக் கணிக்கும். முடிந்த வரை துல்லியமான இருப்பிடத்தைக் கணிக்க இந்தத் தகவல்கள் பயன்படுத்தப்படலாம். அப்படிக் கணிக்கப்படும் இருப்பிடத் தகவல், சாதனத்தில் தேவையான அனுமதிகளைப் பெற்றிருக்கும் ஆப்ஸிற்கும் சேவைகளுக்கும் வழங்கப்படுகிறது. உங்கள் Android சாதனத்தின் இருப்பிட அமைப்புகள் குறித்து மேலும் அறிக.

சாதனத்தின் இருப்பிடத்தை Android கணிக்க, மொபைல் மற்றும் வைஃபை நெட்வொர்க் சிக்னல்கள் உதவும். குறிப்பாக GPS சிக்னல்கள் கிடைக்காத அல்லது துல்லியமற்றதாக இருக்கின்ற அடர்ந்த நகர்ப்புறங்களிலோ வீட்டின் உட்புறங்களிலோ அவை பெரிதும் உதவும். Google இருப்பிடத் துல்லியம் (GLA, Google இருப்பிடச் சேவைகள் எனவும் அழைக்கப்படுகிறது) என்பது இந்த சிக்னல்களைப் பயன்படுத்தி, சாதனத்தின் இருப்பிடத்தைக் கணிப்பதை மேம்படுத்தும் ஒரு சேவையாகும்.

இந்த அளவிற்குத் துல்லியமான இருப்பிடத்தை வழங்க, GLA இயக்கப்பட்டிருக்கும்போது அது உங்கள் Android சாதனத்தில் இருந்து அவ்வப்போது இருப்பிடத் தகவலைச் சேகரிக்கிறது. GPS தரவும், வைஃபை ஆக்சஸ் பாயின்ட்டுகள், மொபைல் நெட்வொர்க்குகள், சாதன சென்சார்கள் (எந்தக் குறிப்பிட்ட நபருடனும் இணைக்கப்படாத சுழலும் தற்காலிகச் சாதன அடையாளங்காட்டியை இவை பயன்படுத்தும்) ஆகியவை பற்றிய தகவலும் இதில் அடங்கும். இருப்பிடத் துல்லியத்தை மேம்படுத்துவதற்கும் வைஃபை ஆக்சஸ் பாயின்ட்டுகள், மொபைல் நெட்வொர்க் டவர்கள் ஆகியவற்றின் திரளாக்கப்பட்ட வரைபடங்களை உருவாக்குதல் உள்ளிட்ட இருப்பிடம் சார்ந்த சேவைகளை வழங்குவதற்கும் GLA இந்தத் தகவலைப் பயன்படுத்துகிறது.

உங்கள் Android சாதனத்தின் இருப்பிட அமைப்புகளுக்குச் சென்று எப்போது வேண்டுமானாலும் GLA சேவையை முடக்கிக்கொள்ளலாம். GLA முடக்கப்பட்டிருந்தாலும் உங்கள் Android சாதனத்தின் இருப்பிடம் தொடர்ந்து கணிக்கப்படும். அப்படி முடக்கப்பட்டிருக்கும்போது சாதனத்தின் இருப்பிடத்தைக் கணிப்பதற்கு GPSஸையும் சாதன சென்சார்களையும் மட்டுமே சாதனம் சார்ந்திருக்கும்.

Google எவ்வாறு எனது இருப்பிடத்தை அறிந்து கொள்கிறது?

நீங்கள் பயன்படுத்தும் தயாரிப்புகளையும் தேர்வுசெய்யும் அமைப்புகளையும் பொறுத்து, நீங்கள் பயன்படுத்தும் சில சேவைகளையும் தயாரிப்புகளையும் உங்களுக்கு மேலும் பயனுள்ளதாக்க வெவ்வேறு விதமான இருப்பிடத் தகவல்களை Google பயன்படுத்தக்கூடும்.

உங்கள் IP முகவரி, சாதன இருப்பிடம் போன்ற நிகழ் நேர சிக்னல்களில் இருந்தும், Google தளங்கள் மற்றும் சேவைகளில் நீங்கள் சேமித்த செயல்பாடுகளில் இருந்தும் இந்த இருப்பிடத் தகவல் பெறப்படலாம். இந்த முக்கியமான வழிகளில் உங்கள் இருப்பிடம் குறித்த தகவலை Google பெறக்கூடும்:

உங்கள் IP முகவரி மூலம்

ஐபி அட்ரெஸ் எனவும் அழைக்கப்படும் IP முகவரி என்பது இணைய சேவை வழங்கும் நிறுவனத்தால் உங்கள் கம்ப்யூட்டர்/சாதனத்திற்கு ஒதுக்கப்படும் ஓர் எண் ஆகும். உங்கள் சாதனங்களுக்கும் நீங்கள் பயன்படுத்தும் இணையதளங்கள் மற்றும் சேவைகளுக்கும் இடையே இணைப்பை உருவாக்க IP முகவரிகள் பயன்படுத்தப்படுகின்றன.

பல்வேறு இணையச் சேவைகளைப் போலவே, சில அடிப்படைச் சேவைகளை வழங்க Google நீங்கள் இருக்கும் பொதுவான பகுதி குறித்த தகவலைப் பயன்படுத்தலாம். தொடர்புடைய தேடல் முடிவுகளைக் காட்டுதல் (எ.கா. என்ன நேரம் ஆகிறது என்று ஒருவர் தேடும்போது), வழக்கத்திற்கு மாறான செயல்பாட்டைக் கண்டறிவதன் மூலம் உங்கள் கணக்கைப் பாதுகாப்பாக வைத்திருத்தல் (எ.கா. புதிய நகரத்தில் இருந்து உங்கள் கணக்கில் உள்நுழையும்போது) போன்றவை அடிப்படைச் சேவைகளில் அடங்கும்.

கவனத்திற்கு: இணைய டிராஃபிக்கை அனுப்பவும் பெறவும் சாதனங்களுக்கு IP முகவரி தேவை. IP முகவரிகள் தோராயமாகப் புவியியல் பகுதியை அடிப்படையாகக் கொண்டவை. எனவே நீங்கள் பயன்படுத்தும் ஆப்ஸ், சேவைகள், இணையதளங்கள் (google.com உட்பட) போன்றவற்றால் உங்கள் IP முகவரி மூலம் பெறப்படும் உங்களின் பொதுவான பகுதி குறித்து அனுமானிக்கவும் அதுகுறித்த தகவல்கள் சிலவற்றைப் பயன்படுத்தவும் முடியலாம்.

நீங்கள் சேமித்த செயல்பாடுகள் மூலம்

உங்கள் Google கணக்கில் உள்நுழைந்திருந்து இணையம் மற்றும் ஆப்ஸ் செயல்பாட்டை நீங்கள் இயக்கியிருந்தால் Google தளங்கள், ஆப்ஸ், சேவைகள் ஆகியவற்றில் உள்ள உங்கள் செயல்பாட்டுத் தரவு உங்கள் கணக்கின் 'இணையம் மற்றும் ஆப்ஸ் செயல்பாட்டில்' சேமிக்கப்படலாம். சில செயல்பாடுகளில், Google சேவையைப் பயன்படுத்தும்போது நீங்கள் இருந்த பொதுவான பகுதி குறித்த தகவல் இருக்கலாம். பொதுவான பகுதியைப் பயன்படுத்தி ஒன்றைத் தேடும்போது குறைந்தது 3 சதுர கிலோமீட்டர் தொலைவு எல்லைக்குள்ளான பகுதி, தேடலுக்குப் பயன்படுத்தப்படும் அல்லது குறைந்தது 1000 பேர் வசிக்கக்கூடிய இருப்பிடங்களை உள்ளடக்கிய பகுதி வரை அந்த எல்லை விரிவடையும். இது உங்கள் தனியுரிமையைப் பாதுகாக்க உதவுகிறது.

சில சந்தர்ப்பங்களில், உங்கள் தேடலுக்கான தொடர்புடைய இருப்பிடத்தைக் கணிப்பதற்குக் கடந்த காலத்தில் எங்கிருந்தெல்லாம் நீங்கள் தேடினீர்களோ அந்தப் பகுதிகள் பயன்படுத்தப்படலாம். உதாரணமாக, நீங்கள் சென்னையில் இருக்கும்போது காஃபி கடைகளைத் தேடுகிறீர்கள் எனில், எதிர்காலத்தில் நீங்கள் ஏதேனும் தேடும்போது சென்னைக்கான முடிவுகள் உங்களுக்குக் காட்டப்படக்கூடும்.

எனது செயல்பாடுகள் என்பதற்குச் சென்று உங்கள் இணையம் மற்றும் ஆப்ஸ் செயல்பாட்டை நீங்கள் பார்க்கலாம் கட்டுப்படுத்தலாம்.

உங்கள் Google கணக்கில் நீங்கள் உள்நுழைந்திருக்கவில்லை எனில் மிகவும் தொடர்புடைய முடிவுகளையும் பரிந்துரைகளையும் வழங்குவதற்கு உதவும் வகையில், நீங்கள் பயன்படுத்தும் சாதனத்தில் மேற்கொண்ட முந்தைய தேடல்களின் சில இருப்பிடத் தகவல்களை Google சேமிக்கக்கூடும். Search பிரத்தியேகமாக்கலை முடக்கினால், உங்கள் இருப்பிடத்தைக் கணிக்க முந்தைய தேடல் செயல்பாட்டை Google பயன்படுத்தாது. தனிப்பட்ட முறையில் எப்படித் தேடுவது, உலாவுவது என்பது குறித்து மேலும் அறிக.

நீங்கள் சேமித்த வீடு அல்லது பணியிட முகவரிகள் மூலம்

உங்கள் வீடு, பணியிடம் போன்ற முக்கிய இடங்களை உங்கள் Google கணக்கில் சேமித்து வைத்துக்கொள்ள நீங்கள் தேர்வுசெய்யலாம். உங்கள் வீடு அல்லது பணியிட முகவரிகளை நீங்கள் அமைத்தால், வீடு அல்லது பணியிடத்திற்கான வழிகளைக் கண்டறிதல், தேடல் முடிவுகளில் அவற்றுக்கு மிக அருகில் உள்ளவற்றைப் பெறுதல் உள்ளிட்ட செயல்களை மிகவும் எளிதாகச் செய்யவும், விளம்பர நோக்கங்களுக்காகவும் அவை உதவும்.

உங்கள் Google கணக்கிற்குச் சென்று உங்கள் வீடு அல்லது பணியிட முகவரிகளை எப்போது வேண்டுமானாலும் மாற்றலாம் நீக்கலாம்.

உங்கள் சாதனத்தின் மூலம்

இருப்பிடத்தை உங்கள் சாதனத்தின் மூலம் Google ஆப்ஸ் எப்படிப் பயன்படுத்துகின்றன?

Search, Maps போன்ற Googleளின் ஆப்ஸ் உள்ளிட்ட ஆப்ஸுக்கு உங்களின் துல்லியமான இருப்பிடத்திற்கான அணுகலை வழங்கலாமா வேண்டாமா என்பதை நீங்கள் கட்டுப்படுத்துவதற்குப் பயன்படுத்தக்கூடிய அமைப்புகள் அல்லது அனுமதிகள் சாதனங்களில் உள்ளன. Google Maps போன்ற ஆப்ஸில் வழிகளைக் காட்டுவதற்கோ பயனளிக்கும் வகையில் அருகிலுள்ளவை தொடர்பான தேடல் முடிவுகளைப் பெற உதவுவதற்கோ இப்படியான துல்லியமான இருப்பிட விவரம் பயன்படுகிறது. உதாரணமாக, துல்லியமான இருப்பிட அமைப்புகள் அல்லது அனுமதிகள் இயக்கப்பட்டிருக்கும்போது உள்ளூர் இடங்கள், வானிலைத் தகவல் போன்றவற்றைத் தேடினால் அவற்றுக்கு மிகவும் தொடர்புடைய தேடல் முடிவுகளைப் பெறுவீர்கள்.

iOS, Android ஆகிய இரண்டிலும் ஆப்ஸிற்கான இருப்பிட அனுமதிகளை இயக்கவும் முடக்கவும் அமைப்புகள் உள்ளன. இருப்பிடம் சார்ந்த அம்சங்களையும் சேவைகளையும் வழங்க உங்கள் இருப்பிடத்தைப் பயன்படுத்த ஆப்ஸை நீங்கள் அனுமதிக்கலாம். கவனத்திற்கு: சில நேரங்களில் உங்களின் துல்லியமான இருப்பிடத்தை ஆப்ஸ் தற்காலிகமாகச் சேமித்து வைப்பது அவசியமாகும். இதன்மூலம் ஆப்ஸால் பயனுள்ள முடிவுகளை விரைவாக வழங்கவும், இருப்பிடம் தொடர்ந்து புதுப்பிக்கப்படுவதைத் தவிர்த்து பேட்டரியைச் சேமிக்கவும் முடியும்.

Find My Device போன்ற சில ஆப்ஸுக்கோ இருப்பிடப் பகிர்வு போன்ற நீங்கள் பயன்படுத்த விரும்பும் சில அம்சங்களுக்கோ மூடியபிறகும் பின்னணியில் இருந்து உங்கள் சாதனத்தின் இருப்பிடத்தை அணுகுவதற்கான அனுமதி தேவை.

உங்கள் Android சாதனத்தில் இருப்பிடச் சேவை எப்படிச் செயல்படுகிறது என்பது குறித்த கூடுதல் தகவலுக்கு இங்கே பார்க்கவும்.

காலப்பதிவும் இணையம் மற்றும் ஆப்ஸ் செயல்பாடும் எனது Google கணக்கில் எப்படிச் சேமிக்கப்படுகின்றன?

காலப்பதிவும் இணையம் மற்றும் ஆப்ஸ் செயல்பாடும்

'காலப்பதிவு' என்பதும் 'இணையம் மற்றும் ஆப்ஸ் செயல்பாடு' என்பதும் இருப்பிடத்தைப் பயன்படுத்தும் Google கணக்கு அமைப்புகளாகும். இரண்டையும் குறித்து மேலோட்டமாக இங்கே பார்ப்போம். கவனத்திற்கு: பிற அம்சங்களும் தயாரிப்புகளும்கூட இருப்பிடத் தகவலைச் சேகரிக்கலாம் சேமிக்கலாம்.

காலப்பதிவு

'காலப்பதிவு' அமைப்பை இயக்கினால் நீங்கள் சென்று வந்த இடங்களையும், செல்வதற்கு நீங்கள் தேர்ந்தெடுத்த வழிகள் மற்றும் பயணங்களையும் நினைவில் வைத்துக்கொள்ள உதவும் பிரத்தியேக வரைபடத்தை உங்களின் எல்லாச் சாதனங்களிலும் அது உருவாக்கும்.

இயல்பாகவே 'காலப்பதிவு' அமைப்பு முடக்கப்பட்டிருக்கும். 'காலப்பதிவு' அமைப்பை இயக்கினால், நீங்கள் உள்நுழைந்திருக்கின்ற தகுதிபெறும் ஒவ்வொரு மொபைல் சாதனத்திலும் உங்கள் சாதனத்தின் துல்லியமான இருப்பிடம் தொடர்ந்து சேமிக்கப்படும். Google ஆப்ஸ் பயன்படுத்தப்படாதபோதும், உங்கள் காலப்பதிவை உருவாக்க இந்தச் சாதன இருப்பிடங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

Google அனுபவங்களை அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக்க, 'காலப்பதிவு' அமைப்பு இவற்றுக்காகப் பயன்படுத்தப்படலாம்:

  • ஒருங்கிணைக்கப்பட்ட இருப்பிடத் தரவின் அடிப்படையில் பிரபலமான நேரங்கள், போக்குவரத்து நெரிசல் போன்ற சமூகப் போக்குகளைக் காட்டுதல்
  • மோசடியையும் தவறான பயன்பாட்டையும் கண்டறிந்து தடுத்தல்
  • விளம்பரத் தயாரிப்புகள் உள்ளிட்ட Google சேவைகளை வழங்குதல் மேம்படுத்துதல்

நீங்கள் ‘இணையம் மற்றும் ஆப்ஸ் செயல்பாடு’ அமைப்பை இயக்கியிருந்தால், அருகிலுள்ள பிசினஸ்களின் ஸ்டோர்களுக்கு விளம்பரங்களின் மூலம் எத்தனை முறை வாடிக்கையாளர்கள் வருகிறார்கள் என்பதைக் கணிப்பதற்கும் காலப்பதிவுத் தரவு அந்தப் பிசினஸ்களுக்கு உதவ முடியும். அடையாளம் நீக்கப்பட்ட கணிப்புகள் மட்டுமே பிசினஸ்களுடன் பகிரப்படும். தனிப்பட்ட தகவல் எதுவும் பகிரப்படாது.

உங்கள் Google அனுபவங்களைப் பிரத்தியேகமாக்குவதற்கும் உங்கள் காலப்பதிவு உதவ முடியும். உதாரணமாக, உங்களின் வழக்கமான பயணம் குறித்து Google Mapsஸில் அறிவிப்புகளை அனுப்புதல் போன்றவை.

உங்கள் காலப்பதிவில் சேமித்தவற்றை எந்த நேரத்திலும் பார்க்கலாம் திருத்தலாம் நீக்கலாம். 'காலப்பதிவு' அமைப்பை இயக்கியுள்ளீர்களா என்பதை அறிய, செயல்பாட்டுக் கட்டுப்பாடுகளைப் பார்க்கவும். அங்கே, உங்கள் 'காலப்பதிவு' அமைப்பை நீங்கள் கட்டுப்படுத்தலாம்.

'காலப்பதிவு' அமைப்பின் ஒரு பகுதியாக உங்களின் துல்லியமான இருப்பிடம், குறிப்பிட்ட நேரத்தில் எத்தனை முறை சேகரிக்கப்படுகிறது என்பது மாறுபடும். உதாரணமாக, Google Mapsஸில் நீங்கள் வழிகாட்டுதலைப் பயன்படுத்தினால் உங்கள் துல்லியமான இருப்பிடம் ஒரு நிமிடத்திற்குப் பலமுறை சேகரிக்கப்படலாம். ஆனால், உங்கள் மொபைலைப் பயன்படுத்தவில்லை எனில் சில மணிநேரங்களுக்கு ஒருமுறை மட்டும் சேகரிக்கப்படும்.

காலப்பதிவுத் தரவு எவ்வளவு காலத்திற்குச் சேமித்து வைக்கப்படும் என்பது உங்கள் அமைப்புகளைப் பொறுத்தது. 3, 18 அல்லது 36 மாதங்களுக்குப் பிறகு இந்தத் தரவு தானாகவே நீக்கப்படுமாறு அமைக்கலாம் அல்லது நீங்கள் நீக்காத வரை தரவைச் சாதனத்தில் தொடர்ந்து வைத்திருக்கலாம். செயல்பாட்டுக் கட்டுப்பாடுகளில் எப்போது வேண்டுமானாலும் இதை மாற்றிக்கொள்ளலாம்.

நினைவில் கொள்ளவேண்டியவை

'காலப்பதிவு' அமைப்பை முடக்கினால்

  • நீங்கள் முன்னர் சேமித்திருந்த காலப்பதிவுத் தரவை நீங்கள் நீக்காத வரை Google தொடர்ந்து வைத்திருக்கும் அல்லது அந்தத் தரவு உங்கள் 'தானாக நீக்குதல்' அமைப்புகளில் நீங்கள் தேர்வுசெய்த காலத்திற்குப் பிறகு நீக்கப்படும்.
  • 'காலப்பதிவு' அமைப்பை முடக்குவதால் இருப்பிடத் தகவலை 'இணையம் மற்றும் ஆப்ஸ் செயல்பாடு' அல்லது பிற Google தயாரிப்புகள் சேமிக்கும் விதத்திலோ அந்தத் தகவலை அவை பயன்படுத்தும் விதத்திலோ எந்தவித மாற்றமும் இருக்காது. எ.கா. உங்கள் IP முகவரியின் அடிப்படையில் இருப்பிடத் தகவல் சேமிக்கப்படுவது. இருப்பிடத் தகவலைச் சேமிக்கும் பிற அமைப்புகள் தொடர்ந்து உங்களிடம் இருக்கலாம்.

'காலப்பதிவு' அமைப்பை இயக்கியுள்ளீர்களா என்பதை அறிய, செயல்பாட்டுக் கட்டுப்பாடுகளைப் பார்க்கவும். மேலும் அறிக.

இணையம் மற்றும் ஆப்ஸ் செயல்பாடு

Maps, Search போன்ற Google சேவைகளில் உங்கள் அனுபவத்தை மிகவும் பிரத்தியேகமாக்க இணையம் மற்றும் ஆப்ஸ் செயல்பாட்டுத் தரவு பயன்படுத்தப்படுகிறது. உங்கள் விளம்பர அமைப்புகளைப் பொறுத்து உங்களுக்கு மிகவும் தொடர்புடைய விளம்பரங்களைக் காட்டவும் இது பயன்படுத்தப்படுகிறது. எந்தச் சாதனங்களில் எல்லாம் உங்கள் கணக்கின் மூலம் நீங்கள் உள்நுழைந்துள்ளீர்களோ அவற்றில் இணையம் மற்றும் ஆப்ஸ் செயல்பாடு வேலை செய்யும்.

இணையம் மற்றும் ஆப்ஸ் செயல்பாடு இயக்கப்பட்டிருக்கும்போது, Google சேவைகள் முழுவதிலும் நீங்கள் மேற்கொள்ளும் செயல்பாடுகளை உங்கள் கணக்கின் இணையம் மற்றும் ஆப்ஸ் செயல்பாட்டில் Google சேமிக்கும். Google சேவையைப் பயன்படுத்தியபோது நீங்கள் இருந்த பொதுவான பகுதி போன்ற தொடர்புடைய தகவல்கள் இதில் அடங்கும்.

உதாரணமாக, வானிலைத் தகவல் குறித்து நீங்கள் தேடும்போது உங்கள் சாதனத்தின் மூலம் அனுப்பப்பட்ட இருப்பிடத்திற்கான முடிவுகளைப் பெற்றால், நீங்கள் தேடும்போது உங்கள் சாதனம் இருந்த பொதுவான பகுதி உட்பட இந்தச் செயல்பாடு உங்கள் இணையம் மற்றும் ஆப்ஸ் செயல்பாட்டில் சேமிக்கப்படும். உங்கள் சாதனத்தின் மூலம் அனுப்பப்பட்ட துல்லியமான இருப்பிடம் சேமிக்கப்படாது, இருப்பிடத்தின் பொதுவான பகுதி மட்டுமே சேமிக்கப்படும். எதைக் குறித்தாவது எதிர்காலத்தில் தேடும்போது மிகவும் தொடர்புடைய இருப்பிடத்தைக் கண்டறிய Googleளுக்கு உதவக்கூடிய, சேமிக்கப்பட்ட இந்த இருப்பிடம் IP முகவரி அல்லது உங்கள் சாதனத்தின் மூலம் பெறப்பட்டிருக்கலாம். உங்கள் இணையம் மற்றும் ஆப்ஸ் செயல்பாட்டில் இருந்து, இந்தச் சேமிக்கப்பட்ட இருப்பிடம் 30 நாட்களுக்குப் பிறகு தானாகவே நீக்கப்படும்.

உங்களுக்குத் தொடர்புடைய பொதுவான பகுதிகளைப் புரிந்துகொள்ள Googleளுக்கு உதவுவதற்கும், தேடுவது போன்ற செயல்களை நீங்கள் மேற்கொள்ளும்போது அந்தப் பகுதிகள் தொடர்பான முடிவுகளை உங்களுக்குக் காட்டுவதற்கும் இணையம் மற்றும் ஆப்ஸ் செயல்பாட்டுத் தரவு உதவுகிறது.

‘இணையம் மற்றும் ஆப்ஸ் செயல்பாடு’ அமைப்பின் மூலம் சேமித்த இருப்பிடத்தையும் பிற தகவலையும் நீங்கள் பார்க்கலாம், நீக்கலாம் அல்லது செயல்பாட்டுக் கட்டுப்பாடுகள் என்பதற்குச் சென்று அந்த அமைப்பை முடக்கிக்கொள்ளலாம். இணையம் மற்றும் ஆப்ஸ் செயல்பாட்டை முடக்குவது உங்கள் எதிர்காலச் செயல்பாட்டுத் தரவு சேமிக்கப்படுவதை நிறுத்தும்.

நினைவில் கொள்ளவேண்டியவை

இணையம் மற்றும் ஆப்ஸ் செயல்பாட்டை முடக்கினால்

  • அப்போதும் நீங்கள் சேமித்த செயல்பாடு இருக்கக்கூடும். அத்துடன் நீங்கள் நீக்காத வரை அது பயன்படுத்தப்படலாம். அதை எப்போது வேண்டுமானாலும் நீங்கள் நீக்கலாம். அப்போதும் நீங்கள் சேமித்த இருப்பிடத் தகவல் 30 நாட்களுக்குப் பிறகு தானாக நீக்கப்படும்.
  • இணையம் மற்றும் ஆப்ஸ் செயல்பாட்டை முடக்குவதால் இருப்பிடத் தகவலை 'காலப்பதிவு' போன்ற பிற அமைப்புகள் சேமிக்கும் விதத்திலோ அந்தத் தகவலை அவை பயன்படுத்தும் விதத்திலோ எந்தவித மாற்றமும் இருக்காது. IP முகவரி உட்பட பிற அமைப்புகளின் ஒரு பகுதியாக இருப்பிடத் தகவலின் பிற வகைகள் தொடர்ந்து உங்களிடம் இருக்கலாம்.

இணையம் மற்றும் ஆப்ஸ் செயல்பாட்டை இயக்கியுள்ளீர்களா என்பதை அறிய, செயல்பாட்டுக் கட்டுப்பாடுகளைப் பார்க்கவும். மேலும் அறிக

அடையாளம் திரிக்கப்பட்ட அல்லது அடையாளம் நீக்கப்பட்ட இருப்பிடத் தகவலை Google எப்படிப் பயன்படுத்துகிறது?

பயனர்களின் தனியுரிமையை மேம்படுத்துவதற்கு உதவ அடையாளம் நீக்கப்பட்ட அல்லது அடையாளம் திரிக்கப்பட்ட இருப்பிடத் தகவலை Google பயன்படுத்துகிறது. பொதுவாக, அடையாளம் நீக்கப்பட்ட தரவை எந்தவொரு தனிநபருடனும் தொடர்புபடுத்த முடியாது. ஒருவரின் கணக்கு, பெயர், மின்னஞ்சல் முகவரி போன்ற தனிப்பட்ட முறையில் அடையாளம் காணக்கூடிய தகவலுடன் இல்லாமல் தொடர்ச்சியான எண்கள் போன்ற தனித்துவமான அடையாளங்காட்டியுடன், அடையாளம் திரிக்கப்பட்ட தகவல் தொடர்புபடுத்தப்படலாம். விளம்பரப்படுத்தல், பிரபலமடைபவை பற்றிய தகவலை வழங்குதல் போன்ற நோக்கங்களுக்காக, அடையாளம் திரிக்கப்பட்ட மற்றும் அடையாளம் நீக்கப்பட்ட இருப்பிடத் தகவலை Google தனது தயாரிப்புகள் மற்றும் சேவைகளில் பயன்படுத்தக்கூடும்.

இருப்பிடத் தகவலுடன் இணைக்கப்பட்ட சில சூடானிமஸ் ஐடன்டிஃபையர்களைப் பயனர்களால் மீட்டமைக்க முடியலாம். உதாரணமாக, பயனர்கள் அவர்களின் Android சாதனங்களில் விளம்பரப்படுத்தல் ஐடிகளை மீட்டமைப்பதன் மூலம் சில சூடானிமஸ் ஐடன்டிஃபையர்களை மீட்டமைக்க முடியும். கூடுதலாக, பயனர் தனியுரிமையை மேம்படுத்துவதற்காகச் சில குறிப்பிட்ட சூடானிமஸ் ஐடன்டிஃபையர்களை Google தானாகவே மீட்டமைக்கிறது. பயனர்கள் அவர்களின் சாதனங்களில் இருப்பிடம் சார்ந்த சேவையையும் இருப்பிடத் துல்லியத்தையும் மேம்படுத்துவதற்காகக் கட்டுப்படுத்தக்கூடிய, சாதன அமைப்பான GLA அமைப்பை மீட்டமைப்பதும் இதில் அடங்கும்.

தனியாக, அடையாளம் நீக்கப்பட்ட இருப்பிடத் தகவலை Google பயன்படுத்தலாம். உதாரணமாக, பயனர்கள் Google Mapsஸில் உணவகம், பூங்கா போன்ற இடங்கள் மீது தட்டி குறிப்பிட்ட ஒரு பகுதியில் அந்த இடங்களுக்கான பிரபலமடைபவற்றைப் பார்க்கலாம். பரபரப்பான நேரங்கள் போன்ற விவரங்களை உருவாக்கப் பயன்படுத்தப்படும் இருப்பிடத் தகவலைத் தனிநபரின் அடையாளத்தைக் கண்டறிய பயன்படுத்த முடியாது. பரபரப்பான நேரங்கள் குறித்து துல்லியமான மற்றும் அடையாளம் நீக்கப்பட்ட விவரங்களை வழங்க Googleளிடம் போதுமான தகவல் இல்லையெனில், அந்த விவரங்கள் Googleளில் காட்டப்படாது.

தங்கள் கணக்கிலிருந்து வெளியேறியவர்களுக்கு Searchசைப் பிரத்தியேகமாக்குதல் அமைப்பு, YouTube அமைப்புகள், விளம்பர அமைப்புகள் உட்பட அவர்களின் உலாவி அல்லது சாதனத்துடன் தொடர்புடைய தகவலை நிர்வகிப்பதற்கான பிற வழிகளையும் Google வழங்குகிறது. மேலும் அறிக

இருப்பிடத் தகவலை Google பயன்படுத்தும் முறை குறித்து Google தனியுரிமைக் கொள்கையில் மேலும் அறிக. சேகரிக்கப்பட்ட தரவை Google எப்படித் தக்கவைக்கிறது, தரவை Google எப்படி அடையாளம் நீக்கிச் செயலாக்குகிறது ஆகியவை குறித்து மேலும் அறிக.

இருப்பிடத் தகவலை Google எவ்வளவு காலத்திற்குத் தக்கவைக்கிறது?

Google சேகரிக்கும் இருப்பிடத் தகவல் உள்ளிட்ட பயனர் தரவைத் தக்கவைப்பதற்கான எங்கள் நடைமுறைகள் குறித்துGoogle தனியுரிமைக் கொள்கை விளக்குகிறது. என்ன இருப்பிடத் தகவல், அது எப்படிப் பயன்படுத்தப்படுகிறது, பயனர்கள் அவர்களது அமைப்புகளை எப்படி உள்ளமைக்கின்றனர் ஆகியவற்றின் அடிப்படையில் வெவ்வேறு காலகட்டங்களுக்கான இருப்பிடத் தகவல் சேகரிக்கப்படுகிறது.

நீங்கள் நீக்காத வரை சில இருப்பிடத் தகவல்கள் உங்கள் Google கணக்கில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும்

  • தக்கவைத்தல் மற்றும் நீக்குதல் விருப்பங்களைக் கட்டுப்படுத்துதல்: 'காலப்பதிவு', 'இணையம் மற்றும் ஆப்ஸ் செயல்பாடு' ஆகிய இரண்டிலும் தானாக நீக்கும் விருப்பம் உள்ளது. இதன் மூலம் 3, 18, 36 மாதங்கள் போன்ற அமைக்கப்பட்ட குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு தரவைத் தானாகவே நீக்கலாம். காலப்பதிவு மற்றும் எனது செயல்பாடுகள் என்பதற்குச் சென்றும் இந்தத் தரவைப் பார்க்கலாம், உங்கள் விருப்பத்தேர்வுக்கு ஏற்ப குறிப்பிட்ட செயல்பாட்டையோ மொத்தத் தரவையோ நீக்கிக்கொள்ளலாம். நீங்கள் எப்போது வேண்டுமானாலும் இந்த அமைப்புகளையோ தானாக நீக்கும் விருப்பத்தையோ மாற்றிக்கொள்ளலாம்.
  • இருப்பிடத் தகவலைச் சேமித்தல்: Google தயாரிப்பு அல்லது சேவையைப் பொறுத்து இருப்பிடத் தகவல் உங்கள் Google கணக்கில் சேமிக்கப்படலாம். உதாரணமாக, Photosஸில் இருப்பிடங்களை நீங்கள் குறியிடலாம் அல்லது Mapsஸில் வீடு/பணியிட முகவரியைச் சேர்க்கலாம். இந்த இருப்பிடத் தகவலை உங்களால் நீக்க முடியும்.

நீங்கள் தரவை நீக்கும்போது, அதை உங்கள் கணக்கில் இருந்து முழுமையாகவும் பாதுகாப்பாகவும் நீக்க Google ஒரு கொள்கையைப் பின்பற்றுகிறது. இதனால் அந்தத் தரவை அதற்குப் பிறகு மீட்டெடுக்கவே முடியாது. முதலில், நீங்கள் நீக்கும் செயல்பாடு பார்ப்பதில் இருந்து அகற்றப்படுவதுடன் அதற்குப் பிறகு உங்கள் Google அனுபவத்தைப் பிரத்தியேகமாக்க அது பயன்படுத்தப்படாது. பின்னர், Google சேமிப்பக சிஸ்டங்களில் இருந்து அந்தத் தரவைப் பாதுகாப்பாகவும் முழுமையாகவும் நீக்குவதற்காக வடிவமைக்கப்பட்ட செயல்முறையை Google தொடங்கும். சேகரிக்கப்பட்ட தகவலை Google எப்படித் தக்கவைத்துக்கொள்கிறது என்பது குறித்து மேலும் அறிக.

குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு காலாவதியாகும் தகவல்கள்

பிற இருப்பிடத் தகவலுக்கு, தரவை Google எப்படித் தக்கவைக்கிறது என்பதில் விவரிக்கப்பட்டுள்ளபடி சில சமயங்களில் பயனராகவே தரவை நீக்குவதற்குப் பதிலாக, குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு தானாகவே தரவு நீக்கப்படுமாறு அமைக்கலாம். அந்தக் குறிப்பிட்ட காலம் வரை தரவை Google சேமித்து வைத்திருக்கும். தரவைப் பாதுகாப்பாகவும் முழுமையாகவும் நீக்குவதற்கு எடுக்கும் நேரம் அதன் வகையைப் பொறுத்தது. உதாரணம்:

  • 9 மாதங்களுக்குப் பிறகு IP முகவரியின் ஒரு பகுதியையும் 18 மாதங்களுக்குப் பிறகு குக்கீ தகவலையும் நீக்குவதன் மூலம் சேவையகப் பதிவுகளில் உள்ள விளம்பரத் தரவின் அடையாளத்தை Google நீக்குகிறது.
  • IP அடிப்படையிலான இருப்பிடத்தையும் சாதன இருப்பிடத்தையும் உங்கள் இணையம் மற்றும் ஆப்ஸ் செயல்பாட்டில் இருந்து 30 நாட்களுக்குப் பிறகு Google நீக்கும்.

வரையறுக்கப்பட்ட நோக்கங்களுக்காக, தகவலானது நீண்டகாலத்திற்குத் தக்கவைத்துக்கொள்ளப்படும்

Google தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி, “பாதுகாப்பு, மோசடி மற்றும் தவறான பயன்பாட்டைத் தடுத்தல், நிதிசார்ந்த பரிவர்த்தனைத் தகவல்களைப் பராமரித்தல் போன்ற நியாயமான பிசினஸ் அல்லது சட்டப்பூர்வ நோக்கங்களுக்காக, தேவைப்படும்போது சில தரவை நீண்ட காலத்திற்கு நாங்கள் தக்கவைத்துக் கொள்கிறோம்.” எங்கள் தக்கவைத்தல் நடைமுறைகள் குறித்து மேலும் அறிக

விளம்பரங்களைக் காட்டுவதற்காக இருப்பிடத் தகவல் எப்படிப் பயன்படுத்தப்படுகிறது?

மிகவும் தொடர்புடைய விளம்பரங்கள் உங்களுக்குக் காட்டப்படுவதற்கு உதவ

உங்கள் இருப்பிடத் தகவலின் அடிப்படையில் விளம்பரங்கள் உங்களுக்குக் காட்டப்படலாம். பொதுவாக, தயாரிப்புகள் எந்த இருப்பிடத்தில் தோன்றுகின்றனவோ அதே வகையான இருப்பிடத் தகவலையே 'Googleளில் விளம்பரங்களும்' பயன்படுத்தும். உதாரணமாக, உங்கள் அமைப்புகளைப் பொறுத்து உங்கள் சாதனம், IP முகவரி, முந்தைய செயல்பாடு ஆகியவற்றின் மூலம் பெறப்படும் இருப்பிடத் தகவலின் அடிப்படையிலோ உங்கள் Google கணக்கில் உள்ள வீடு/பணியிட முகவரிகளின் அடிப்படையிலோ Search மற்றும் பிற Google தளங்களில் விளம்பரங்கள் காட்டப்படலாம். அத்துடன், நீங்கள் வசிக்கும் நாட்டையோ உங்களுக்குப் பிடித்த பொதுவான விஷயங்களையோ கணிக்க, தரவுத்தகவல் (எ.கா. உலாவியின் நேரமண்டலம், டொமைன், பக்கத்தில் உள்ள உள்ளடக்கம், உலாவி வகை, பக்கத்தின் மொழி போன்றவை) பயன்படுத்தப்படலாம். உங்களுடைய IP முகவரி, VPN, ப்ராக்ஸி சர்வீஸ் அல்லது பிற நெட்வொர்க் தகவல்கள் மூலம் பெறப்படும் இருப்பிடத் தகவல்களுடன் சேர்த்து இந்தத் தரவுத்தகவலையும் நாங்கள் சார்ந்திருக்கலாம்.

இருப்பிடத் தகவல் பயன்படுத்தப்பட்டால், நீங்கள் பார்க்கும் விளம்பரங்கள் உங்கள் இருப்பிடம் அல்லது உங்களுக்குத் தொடர்புடைய பகுதிகளுக்கு மிகவும் பொருத்தமானதாக இருக்கும். உதாரணமாக, உங்கள் சாதனத்தின் இருப்பிட அமைப்பு இயக்கப்பட்டிருந்து, உங்களுக்கு அருகில் உள்ள உணவகங்களை Googleளில் நீங்கள் தேடினால், உங்கள் அருகில் உள்ள உணவகங்களுக்கான விளம்பரங்களைக் காட்ட உங்கள் சாதனத்தின் தற்போதைய இருப்பிடம் பயன்படுத்தப்படலாம். Googleளில் விளம்பரங்கள் காட்டப்படும்போது அருகிலுள்ள பிசினஸ்கள் அமைந்துள்ள தூரத்தைக் காட்டவும் உங்கள் இருப்பிடம் பயன்படுத்தப்படலாம்.

உங்களுக்கு மிகவும் பயனுள்ள விளம்பரங்களைக் காட்ட, 'இணையம் மற்றும் ஆப்ஸ் செயல்பாடு' அமைப்பின் ஒரு பகுதியாக உங்களின் முந்தைய உலாவல் அல்லது ஆப்ஸ் செயல்பாடு (உங்கள் தேடல்கள், சென்ற இணையதளங்கள், YouTubeல் நீங்கள் பார்த்த வீடியோக்கள் போன்றவை), சேமிக்கப்பட்ட பொதுவான பகுதிகள் போன்றவற்றையும் Google பயன்படுத்தலாம். உதாரணமாக, நீங்கள் அருகில் பால் எங்கு வாங்குவது என்று Googleளில் தேடினால், நீங்கள் பொதுவாகப் பேருந்துக்காகவோ ரயிலுக்காகவோ காத்திருக்கும்போது Google Searchசில் அடிக்கடி தேடுவதை வைத்து அந்தப் பொதுவான பகுதியில் உள்ள மளிகைக் கடைகளுக்கான விளம்பரங்கள் உங்களுக்குக் காட்டப்படலாம்.

விளம்பரதாரர்கள் அவர்களின் பிசினஸ் அருகே அமைந்துள்ள பொதுவான பகுதிகளுக்கு ( எ.கா. நாடுகள், நகரங்கள், பிராந்தியங்கள் போன்றவை) மட்டுமே விளம்பரங்களைக் காட்ட முடியும்.

எங்கள் Display Network குறித்த கூடுதல் தகவலுக்கு உதவி மையத்தைப் பார்க்கவும்.

செயல்திறனை அளவிட விளம்பரதாரர்களுக்கு உதவ

Google சேவைகள் எப்படிப் பயன்படுத்தப்படுகின்றன என்பதைப் புரிந்துகொள்ள பகுப்பாய்வுகள் மற்றும் அளவீட்டிற்கான இருப்பிடத் தகவலையும் Google பயன்படுத்தலாம். ​உதாரணமாக: உங்கள் ‘காலப்பதிவு’ அமைப்புகளின் அடிப்படையில், விளம்பரதாரர்களின் ஸ்டோர்களுக்கு விளம்பரங்களின் மூலம் எத்தனை முறை வாடிக்கையாளர்கள் வருகிறார்கள் என்பதைக் கணிக்க விளம்பரதாரர்களுக்கு உதவுவதற்காக, காலப்பதிவில் உள்ள இருப்பிடத் தரவை Google பயன்படுத்தலாம். அடையாளம் நீக்கப்பட்ட கணிப்புகள் மட்டுமே விளம்பரதாரர்களுடன் பகிரப்படும். தனிப்பட்ட தகவல் எதுவும் பகிரப்படாது. இதைச் செய்ய, விளம்பரக் கிளிக்குகள் போன்ற உங்கள் இணையம் மற்றும் ஆப்ஸ் செயல்பாட்டுத் தரவை விளம்பரதாரர்களின் ஸ்டோர்களுடன் தொடர்புடைய காலப்பதிவுத் தரவுடன் Google இணைக்கிறது. உங்கள் காலப்பதிவுத் தரவு விளம்பரதாரர்களுடன் பகிரப்படாது.

Googleளின் தயாரிப்புகளையும் சேவைகளையும் மேம்படுத்த

Google அதன் விளம்பரத் தயாரிப்புகளை மேம்படுத்துவதற்காகவும் இருப்பிடத் தகவலைப் பயன்படுத்துகிறது. உதாரணமாக, உங்கள் கணக்கில் சேமிக்கப்பட்டுள்ள, தொடர்புடைய செயல்பாட்டிற்கான பொதுவான பகுதி உட்பட நீங்கள் கிளிக் செய்யும் விளம்பரங்கள் குறித்த தரவு ஒருங்கிணைக்கப்பட்டு ஸ்மார்ட் ஏலம் கருவிகளை மேம்படுத்துவதற்காக மெஷின் லேர்னிங் மாதிரிகளில் பயன்படுத்தப்படும். உங்கள் கணக்கின் தரவு விளம்பரதாரர்களுடன் பகிரப்படாது.

விளம்பரங்களைக் காட்ட எனது இருப்பிடத் தகவல் எப்படிப் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை நான் கட்டுப்படுத்துவது எப்படி?

கடந்த காலத்தில் நீங்கள் Google தளங்களையும் ஆப்ஸையும் பயன்படுத்திய பொதுவான பகுதிகள், உங்களுக்குக் காட்டப்படும் விளம்பரங்களைத் தேர்வுசெய்ய எப்படிப் பயன்படுத்தப்படுகின்றன என்பதை எனது விளம்பர மையத்தில் உள்ள Googleளை நீங்கள் உபயோகித்த இடங்கள் என்ற கட்டுப்பாட்டை அணுகுவதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.

நீங்கள் Googleளைப் பயன்படுத்திய பகுதிகள் இயக்கப்பட்டிருக்கும்போது

விளம்பரப் பிரத்தியேகமாக்கல், Googleளை நீங்கள் உபயோகித்த இடங்கள் ஆகியவை இயக்கப்பட்டிருக்கும்போது, உங்கள் விளம்பரங்களைப் பிரத்தியேகமாக்குவதற்காக Google தளங்களையும் ஆப்ஸையும் பயன்படுத்தியபோது நீங்கள் இருந்த பொதுவான பகுதிகளுடன் தொடர்புடைய உங்கள் இணையம் மற்றும் ஆப்ஸ் செயல்பாட்டில் சேமிக்கப்பட்டுள்ள தரவை Google பயன்படுத்தும்.

நீங்கள் Googleளைப் பயன்படுத்திய பகுதிகள் முடக்கப்பட்டிருக்கும்போது

விளம்பரப் பிரத்தியேகமாக்கல் அல்லது நீங்கள் Googleளைப் பயன்படுத்திய பகுதிகள் முடக்கப்பட்டிருக்கும்போது, Google தளங்களையும் ஆப்ஸையும் நீங்கள் பயன்படுத்திய பொதுவான பகுதிகளுடன் தொடர்புடைய, உங்கள் இணையம் மற்றும் ஆப்ஸ் செயல்பாட்டில் சேமிக்கப்பட்டுள்ள தரவை உங்கள் விளம்பரங்களைப் பிரத்தியேகமாக்குவதற்காக Google பயன்படுத்தாது. நீங்கள் Googleளைப் பயன்படுத்திய பகுதிகள் முடக்கப்பட்டிருந்தாலும், உங்கள் தற்போதைய இருப்பிடம், உங்கள் Google கணக்கில் உங்கள் வீடு/பணியிடமாக நீங்கள் அமைத்துள்ள இடங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் விளம்பரங்கள் உங்களுக்குத் தொடர்ந்து காட்டப்படலாம்.

கூடுதலாக, நீங்கள் கணக்கிலிருந்து வெளியேறியிருந்தால், உங்கள் சாதனம் மற்றும் ஆப்ஸ் அமைப்புகளின் அடிப்படையில் உங்களுக்கு விளம்பரங்களைக் காட்ட உங்கள் IP முகவரி அல்லது உங்கள் சாதனத்திலிருந்து பெறப்படும் உங்கள் தற்போதைய இருப்பிடத்தை Google தொடர்ந்து பயன்படுத்தலாம்.

நீங்கள் கணக்கிலிருந்து வெளியேறியுள்ளபோது பிரத்தியேகமான விளம்பரங்களை இயக்குவதும் முடக்குவதும் எப்படி என்பது குறித்த கூடுதல் தகவலுக்கு இங்கே பார்க்கவும்.

புதிய பக்கத்தில் திறக்கும்(அடிக்குறிப்பைத் திறக்கும்)
  • Afrikaans
  • Bahasa Indonesia
  • Bahasa Melayu
  • Català
  • Čeština
  • Dansk
  • Deutsch
  • Eesti
  • English
  • English (India)
  • English (United Kingdom)
  • Español
  • Español (Latinoamérica)
  • Euskara
  • Filipino
  • Français
  • Français (Canada)
  • Gaeilge
  • Galego
  • Hrvatski
  • Isizulu
  • Íslenska
  • Italiano
  • Kiswahili
  • Latviešu
  • Lietuvių
  • Magyar
  • Malti
  • Nederlands
  • Norsk
  • Polski
  • Português (Brasil)
  • Português (Portugal)
  • Română
  • Slovenčina
  • Slovenščina
  • Srpski
  • Suomi
  • Svenska
  • Tiếng Việt
  • Türkçe
  • অসমীয়া
  • Ελληνικά
  • Български
  • ଓଡିଆ
  • Русский
  • Српски
  • Українська
  • ‫עברית‬
  • ‫اردو‬
  • ‫العربية‬
  • ‫فارسی‬
  • አማርኛ
  • मराठी
  • हिन्दी
  • বাংলা
  • ગુજરાતી
  • தமிழ்
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • മലയാളം
  • ไทย
  • 한국어
  • 中文 (香港)
  • 中文(简体中文)
  • 中文(繁體中文)
  • 日本語
Google ஆப்ஸ்
முதன்மை மெனு